ENNAR
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

ராஜராஜசோழனின் அண்ணன் கொலை

Go down

ராஜராஜசோழனின் அண்ணன் கொலை Empty ராஜராஜசோழனின் அண்ணன் கொலை

Post  Admin Sun Feb 24, 2019 3:28 pm

ராஜத்துரோகக் குற்றங்கள் விசாரணை மற்றும் தண்டனை விஷயங்களில் பொதுவாகவே பேரரசர் மூலமாகவே குற்றங்கள் நடந்த அந்தந்தப் பகுதிகளுக்கு உத்தரவு செல்கிறது. சோழர்களின் முதல் முன்னூறு ஆண்டுகளில் அத்தனையாக ராஜத் துரோகக் குற்றங்கள் இல்லை என்றே சொல்லிவிடலாம். ஆனால் கி.பி. 1200க்கு பிறகு சோழர்கள் ஆட்சியின் கடைசி ஐம்பது ஆண்டுகளில் ஏகப்பட்ட கல்வெட்டுகள் இந்த ராஜத் துரோகக் குற்றங்களையும் தண்டனையயும் பற்றிப் பேசுகின்றன.
முதல் முன்னூறு ஆண்டுகளில் ராஜத்துரோகம் என்று பார்க்கையில் மிகவும் புகழ்பெற்றது, காட்டுமன்னார் கோயில் (வீரநாராயணபுரம்) அருகே அனந்தீஸ்வரம் கோயிலில் கிடைக்கப்பெற்ற உடையார்குடி கல்வெட்டே ஆகும். இந்தக் கல்வெட்டினை அப்படியே கீழே கொடுத்திருக்கிறேன். (உபயம் திரு குடவாயில் பாலசுப்பிரமணியம்.


"ஸ்வஸ்தி ஸ்ரீ கோ ராஜகேசரிவர்மர்க்கு யாண்டு 2 ஆவது வடகரை பிரமதேயம் ஸ்ரீ வீரநாராயண சதுர்வேதி மங்கலத்து பெருங்குறி பெருமக்களுக்கு சக்கரவர்த்தி ஸ்ரீமுகம் பாண்டியனைத் தலைகொண்ட கரிகால சோழனைக் கொன்று துரோகிகளான சோமன்............................................... தம்பி
ரவிதாசனான பஞ்சவன் பிரம்மாதிராஜனும் இவன்றம்பி பரமேஸ்வரன் ஆன இருமுடிச் சோழ பிரம்மாதிராஜனும் இவர்கள் உடப்பிறந்த மலையனூரானும் இவர்கள் தம்பிமாரும் இவர்கள் மக்களிடும் இவர் பிரமாணிமார் பெற்றாளும் இ........................ராமத்தம் பேரப்பன் மாரிடும் இவர்கள் மக்களிடம் இவர்களுக்குப் பிள்ளை குடுத்த மாமன்மாரிடும் தாயோடுடப் பிறந்த மாமன் மாமன்மாரிடும் இவர்கள் உடபிறந்த பெண்களை வேட்டாரினவும் இவர்கள் மக்களை வேட்டாரினவும் ஆக இவ்வனைவர் (முடமை)யும் நம் ஆணைக்குரியவாறு கொட்டயூர் பிரம்ம ஸ்ரீராஜனும் புள்ளமங்கலத்து சந்திரசேகர பட்டனையும் பெறத்தந்தோம். தாங்களும் இவர்கள் கண்காணியோடும் இவர்கள் சொன்னவாறு நம் ஆணைக்குரியவாறு குடியோடு குடிபெறும் விலைக்கு விற்றுத்தலத்திடுக இவை குருகாடிக்கிழான் எழுத்து என்று இப்பரிசுவரஇ
ஸ்ரீமுகத்தின் மேற்பட்ட மலையனூரான் ஆன பாப்பனச்சேரி ரேவதாச கிரமவித்தனும் இவன் மகனும் இவன்றாய் பெரிய நங்கைச்சாணியும் இம்மூவரிதும் ஆன நிலம் ஸ்ரீ வீரநாராயன சதுர்வேதி மங்கலத்து மிப்பிடாகை தேவமங்கலம் ஆன பட்டில நிலம் ஸ்ரீவீரநாராயண சதுர்வேதி மங்கலத்து சபையார் பக்கல் வெண்ணையூர் நாட்டு வெண்ணையூருடையான் நக்கன் அரவணையானான பல்லவ முத்தரைய மகன் பரதனான வியாழகஜமல்லப் பல்லவரையனேன் இந்நிலம் பழம்படி இரண்டே முக்காலே ஒருமாவும் அகமனை ஆறும் ஆக இந்நிலமும் இம்மனையும் நூற்றொருபத்தி
ருகழஞ்சு பொன் குடுத்து விலைகொண் டிவ்வூர் திருவனந்தீஸ்வரத்து பட்டாரகர் கோயிலிலே இவ்வாட்டை மேஷநாயற்று நாயற்றுக்கிழமை பெற்ற புரட்டாசி ஞான்று சந்திராதித்தவர் ஆழ்வார் கோயில் முன்பு மூவாயிரத்தரு நூற்றுவனான நிலையம்பலத்து தண்ணீர் அட்டும் பிராமணன் ஒருவனுக்கு நிச
தம் படி நாழி நெல்லும் ஆட்டைவட்டம் ஒரு காகம் நிசதம் பதினைவர் பிராமணர் உண்பதற்கு ஆக பதினாறு இவறுள் ஐவர் சிவயோகிகள் உண்ணவும் வைத்தேன்
அரையன் பரதன் ஆன வியாழகஜமல்ல பல்லவரையனேன் இதர்மம் ரஷிகின்ற மகாசபையார் ஸ்ரீபாதங்கள் என் தலை மேலன"
. இந்தக் கல்வெட்டுதான் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலுக்கு வித்திட்டது எனலாம். அரசாட்சிக்கு வரவேண்டிய பேரரசர் சுந்தரசோழன் மகனான ஆதித்த கரிகாலனை சிலர் திட்டமிட்டுக் கொன்றுவிட்டனர் (கி.பி. 969/70). இதை ஆதி முதல் அந்தம் வரை விளக்க வந்த கல்கி, அவர் கதையை முடிக்கும்போது யார்தான் கொன்றார்கள் என்பதை சொல்லாமலே விட்டிருக்கிறார். இது கதையாசிரியரின் யுக்தி என பலர் சொன்னாலும், கல்கி தன் கதையில் முடிவு சொல்லாமல் போனது பலருக்குப் பல யூகங்களைத் தந்திருந்தது என்றும் சொல்லலாம். கல்கிக்கு நன்றாகவே தெரியும், கல்கி என்றல்ல, அப்போதே இத் தொடுப்பு கொடுத்த நீலகண்ட சாஸ்திரியாருக்கு, சதாசிவம் பண்டாரத்தாருக்கு இன்னம் பலருக்கும் தெரியும் ஆதித்த கரிகாலனைக் கொன்றது யார் என்பது.. ஆனால் ஏன் இதை கதையில் தெரிவிக்கவில்லை என்றால் இந்தக் கதை முடிந்த கால கட்டத்தில் கொலையாளிகாள் யார் என்பது கண்டுபிடிக்கவில்லை என்பதுதான் உண்மை. ஆகவேதான் கல்கியும் இந்த நியாயத்துக்குத் துணை சென்றிருக்கிறார்.
ஏறத்தாழ 17 ஆண்டுகளுக்குப் பிறகு (கி.பி.986/87) செதுக்கப்பட்ட இந்த உடையார்குடி கல்வெட்டும் இதைத்தான் சொல்கிறது. ரவிதாசன் போன்ற பிராம்மணர்கள் (இவர்கள் பாண்டியநாட்டு சதிக்காரர்களாக கல்கி கதையாகத் தெரிவித்திருந்தாலும் அவர்களில் சோழ நாட்டினரும் இருந்தனர் என்பதும், இவர்கள் குடியில் பிராம்மணராகப் பிறந்ததால் அவர்களுக்கு கொடிய தண்டனைகள் அளிக்காது, அவர்கள், அவர்களது சொந்தக் காரர்கள் அனைவருடைய நிலபுலன்களையும் பறித்து, அவற்றை விற்று, அதன் மூலம் பெறப்பட்ட செல்வத்தால் சிவன் கோயில் புண்ணியம் செய்யுமாறு இந்தக் கட்டளை ராஜராஜ சோழனால் அவன் ஆண்ட இரண்டாம் ஆண்டில் பிறப்பிக்கப்பட்டு அந்த ஆணையை நிறைவேற்றுமாறு வீரநாராயணபுர சதுவேதி மங்கலத்தாருக்கு (பொது அல்லது ஊர் சபை) அனுப்பப்பட்டுள்ளது. சொந்தக்காரர்கள் என வரும்போது குற்றம் செய்யாதவர் அவர்களோடு இருந்தாலும், அவர்களும் குற்றத்துக்குத் துணை போனதாக எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், ராஜராஜ சோழனின் அண்ணனே கொலையுண்டாலும், கொலை செய்தவர் யார், தர்ம நியாயம் என்ன சொல்கிறது என்பதையும் ஆலோசித்துப் பார்த்து இந்த முடிவை மன்னர் எடுத்திருக்கக்கூடும் என்றுதான் சரித்திர ஆராய்ச்சியாளர் பலர் சொல்கிறார்கள். இந்த ராஜத்துரோகமானது பெண்கள் விஷயத்தில் அரசர்கள் எப்படி எடுத்துக் கொண்டு தண்டனையை எப்படி கையாண்டார்கள் என்பது இன்னும் சுவையாக இருக்கும்.ராஜத்துரோகத்தில் சம்பந்தப்பட்ட ஒரு அன்னியநாட்டு இளவரசியின் (வடநாட்டு கங்கைப் பிரதேசத்தைச் சேர்ந்தவள், இவளோடு, இவள் அண்ணனும் இலங்கை மன்னனும் பிடிபட்டிருக்கிறான்) மூக்கை மட்டும் அரிந்து அவளை அவள் நாட்டுக்கு அனுப்பி வைத்ததாக ராஜாதிராஜன் கல்வெட்டு ஒன்று சொல்கிறது. இது நடந்தபோது ராஜேந்திரசோழரும் அவர் மூத்த மகனான ராஜாதிராஜனும் இணைந்து ஆட்சி செய்திருக்கிறார்கள். இது சூர்ப்பனகையின் மூக்கை அரிந்த லட்சுமணனின் செயலோடு ஒப்பு நோக்கவேண்டும் என்று சிலர் சொன்னாலும் குற்றத்தின் ஆழம் தெரியாமல் நாம் எதுவும் சொல்லமுடியாதுதான்.
ஆனால் அக்காலச் சூழ்நிலையில் பெண்களுக்கு, குறிப்பாக சோழதேசத்துக்கு எல்லைக்குட்பட்ட தமிழ்நாட்டுப் பெண்களுக்கு மன்னர்கள் நல்ல சூழ்நிலையை வகுத்துக் கொடுத்திருந்தார்கள். இவை வெளிநாட்டு மகளிருக்கு இல்லை என்பதையும் போரில் பிடிபட்டோர் அவர்கள் நிலைக்குத் தகுந்தவாறு சோழ நாட்டில் நடத்தப்பட்டனர் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும். ராஜத்துரோகம் யார் செய்தால் என்ன, துரோகம் என்றாலே கடுமையான தண்டனை அவசியம் தேவைதான்.
பொதுவாகவே ஊர் எனும் பொதுச்சபை சோழர் காலத்தில் குடவோலை மூலம் தேர்ந்தெடுக்கப்படுவது தெரிந்த செய்திதான். இந்த சபையே முக்கியமாக ஊருக்கு ஊர் எல்லா விஷயங்களையும் கையாண்டது. இருந்தாலும் தர்மாசனம் என்றொரு அமைப்பு வகையும் இருந்ததாக செங்கல்பட்டு மாவட்டம் திருவடந்தை கோயிலில் கிடைத்த கல்வெட்டு (SII-XIII – No.87) ஒன்று தெரிவிக்கிறது. தர்மாசனம் மூலம் நீதி நியாயம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த தர்மாசனம் அமைப்பிலோ, அல்லது ஊர் சபையின் முடிவிலோ பேதங்கள் வந்தால் மட்டுமே அரசனின் பிரதிநிதியாக அந்தந்த பிராந்தியத்தில் நியமிக்கப்பட்டுள்ளவர்கள் நேரடியாகத் தலையிட்டு அரசனின் சார்பாக நீதி வழங்கியதாக பல கல்வெட்டுகள் மூலம் தெரியவருகிறது. (ARE 200/1929).

Admin
Admin

Posts : 15
Join date : 24/07/2011
Age : 70
Location : P.U.C.

https://ennar.forumta.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum