ENNAR
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

சோழர் காலத்துச் சட்டம், ஒழுங்கு தண்டனைகள் 3

Go down

சோழர் காலத்துச் சட்டம், ஒழுங்கு தண்டனைகள் 3 Empty சோழர் காலத்துச் சட்டம், ஒழுங்கு தண்டனைகள் 3

Post  Admin Sun Feb 24, 2019 2:49 pm

என்னதான் ராஜத் துரோகம் செய்தாலும் யாருக்கேனும் மரணதண்டனை விதிக்கப்பட்டதா என்றால், கிடைத்த கல்வெட்டுகள் மூலம் பார்க்கையில் மரணதண்டனை என்பது அவ்வளவாக இல்லை என்றே சொல்லலாம். அதற்காக மரணதண்டனை என்பதே கிடையாதா என்று கேள்வி எழலாம். மரணதண்டனை அறவே சோழர்களால் ரத்து செய்யப்படவில்லை என்பது, மூன்றாம் குலோத்துங்கன் (1178-1230) காலத்தில்
எடுக்கப்பட்ட ‘வேளாளக் குடிக்கு மட்டுமே இந்த தண்டனையிலிருந்து விலக்கு’ (ARE 200/1929) என்ற ஒரு கல்வெட்டுக் குறிப்பிலிருந்து தெரிகின்றது. வேளாளர் குலத்துக்கு பெரும் சிறப்பு ஏற்பட்டிருந்தது சேக்கிழார் பெருமான் போன்ற பெரும்புலவர்களால். மேலும் சிவனடியார்கள் பலரும் வேளாளர்
குலத்தினரே. அமைச்சர்கள், வீரர்கள், ஆசிரியர்கள் எனப்  பெரும்பான்மையாகவும் மிகவும் செல்வாக்காகவும் திகழ்ந்த வேளாளர் குடிக்குப்  பெருமை சேர்க்கவே இந்த விலக்கு அளிக்கப்பட்டிருக்கவேண்டும்.
அதே போல ராஜ துரோகம் நடைபெற்றது என்பது தெரியவரும் பட்சத்தில் சோழ அரசர்கள் அதை நியாயமான முறையிலேயே விசாரித்ததும் கல்வெட்டுகள் மூலம் தெரிய வரும். நம் காலத்தில் விசாரணைக் கமிஷன் அமைப்பது போலவே ‘ராஜ ராஜப் பெருவிலை’ என்ற பெயரில் தனி நபரோ அல்லது சில உயர் அரசாங்க அதிகாரிகளோ சம்பவம் நடந்த இடத்துக்குச் சென்று விசாரணை செய்கின்றனர். விசாரண முடிவை அரசனிடம் சமர்ப்பித்து அதற்கான தண்டனைகளையும் அரசனிடம் தெரிவித்தவுடன்
அதற்கேற்றவாறு அரசர்கள் ஆணை பிறப்பிக்கின்றனர். இப்படிப்பட்ட ஆணைகள் கல்வெட்டுகளாக பல கோயில்களில் கிடைத்துள்ளன. 1917ஆம் ஆண்டு கிடைத்த தொல்லியல் குறிப்புப்படி இப்படிப்பட்ட வழக்கு ஒன்றை நாம் பார்ப்போம்.
பனையூர் நாட்டு குணாகணாதிமங்கலத்தில் ஒரு தனவந்தர் ராஜத் துரோகம் செய்ததை நிரூபித்து ராஜராஜப்பெருவிலைக் குழுவினர் மூன்றாம் ராஜராஜசோழனிடம் அறிக்கை சமர்ப்பிக்கின்றனர். அவர்கள் ஆலோசனைப்படியே சோழன் அந்த தனவந்தரின் நிலங்களில் ஐந்து வேலி நான்கு மா அளவில் பறிக்கப்பட்டு அவை உடனுக்குடன் விற்கப்பட்டு அதை வாங்கியவர் கையெழுத்தும் பெறப்பட்டு
ராஜராஜப் பெருவிலையினர் அந்தப் பணத்தை அரசு பொக்கிஷத்தில் சேர்க்கப்பட்டதாக இந்தக் கல்வெட்டுக் குறிப்பு தெரிவிக்கிறது. (ARE 244/1917).
இன்னொரு கல்வெட்டு (ARE 112/1911) ஒன்று இதே போல ஒரு ராஜத்துரோகக் குற்றத்தை விசாரித்த எட்டு பேர் கொண்ட ராஜராஜபெருவிலையினர் குழு அங்கேயே அவரது நிலங்களை ஏலமாக விடுத்து 33000 காசுகளை அரசு கஜானாவில் சேர்ப்பித்ததாகக் குறிப்பிடுகின்றது. இது நடந்த ஆண்டு கி.பி 1250.
இன்னொரு கல்வெட்டு (ARE 506/1918), திருவெண்காடு எனும் ஊரில், இப்படி அரசனுக்கு எதிராக போன ஒருவனின் நிலத்தை, ‘நெறியுடைய மூவேந்த வேளான்’ எனும் பெயருடைய அரசு அதிகாரி பறிமுதல் செய்ததாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது நடந்த காலம் மூன்றாம் ராஜராஜனின் 18 ஆம் ஆண்டுக் காலம் (கி.பி.1235).
ராஜத்துரோகத்துக்கு சமமாக கருதப்படும் (அல்லது இன்னமும் ஒருபடி மேலாக) இன்னொரு குற்றம் சிவத்துரோகம். ராஜத்துரோகத்தைக் கூட மன்னர்கள் பொறுத்துக் கொள்வார்கள் போலும், ஆனால் சிவத்துரோகத்தை மட்டும் சகித்துக் கொள்வதாக இல்லை என்பது ராஜராஜ காலன் தொட்டு கிடைத்து வரும் பல கல்வெட்டுகளில் காணக்கிடைக்கிறது.
சிவத்துரோகம் எனும் குற்றமாவது கோயில் நிலங்களை அபகரித்தல், நன்கொடையாக அளிக்கப்பட்ட நகைகளையும், பணங்களையும் அபகரித்தல் போன்றவை. இவை மட்டுமல்ல, ஒருவர் ஒரு கோயிலுக்கு எண்ணெய் ஒரு வருடம் ஊற்றுவதாக ஒப்புக்கொண்டு, அவர் அதை செய்ய மறுப்பது, கோயில் நிலங்களைக் குத்தகை எடுத்தோர் ஒழுங்காக செலுத்தவேண்டிய குத்தகை பாக்கியையும், வரிகளையும்
செலுத்தாமல் போவது கூட சிவத் துரோகத்தில் வரும். ஒவ்வொரு சமயத்தில் அந்த ஊரை ஆளும் ஊராரே கூட குற்றம் செய்தாலும் கூட கடுமையான சட்ட விதி முறைகளின் படி தண்டனையிலிருந்து தப்பிக்கமுடியாது.
ராஜத்துரோகத்தில் வெறும் நில அபகரிப்பு மட்டுமே தண்டனை என்றால் சிவத்துரோகத்தில் அளிக்கப்பட்ட ஒரு தண்டனையைப் பாருங்கள். அதுவும் மேற்சொன்னபடி ஊராரே சம்பந்தப்பட்ட குற்றம் இது.

காலம்: ராஜராஜ சோழனின் நான்காம் ஆண்டு (கி.பி. 988).
இடம்:படுவூர் நாடு (தற்போதைய செங்கல்பட்டு மாவட்டம்)
குற்றவாளி : ஊரார் சபையே
தீர்ப்பு: திருவடந்தைக் கோயிலில் உள்ள ஸ்ரீவராக தேவருக்கு ஒரு நாளைக்கு ஒரு உழக்கு என்ற அளவில் வருடத்துக்கு 90 நாழி எண்ணெய் செலுத்த வேண்டும். அப்படி செலுத்தத் தவறும் பட்சத்தில் வட்டியாக 20 கழஞ்சு பொன் அரசு அதிகாரியான வள்ளுவநாட்டு துக்கய்யன் சாத்தான் வசூலிக்கவேண்டும், மேலும்
இப்படி தவறியதற்கு தண்டனைப்பணமாக நாலரைக் காணம் ஊர் தர்மாசனத்துக்கும் இந்தச் சபை செலுத்தவேண்டும். (SII Vol. - 8, No.87).
தண்டனை, வட்டி இவையெல்லாம் சரி, இந்த ஊரார் செய்த குற்றம் என்ன தெரியுமா.. கோயில் நிலத்தில் வரும் ஒரு குத்தகை பணத்தை எடுத்து தவறுதலாக ஊரார் அரசு கஜானாவுக்கு செலுத்தவேண்டிய நீர் வரியைக் கட்டியதுதான். இங்கே ஒன்று ஆலோசிக்கவேண்டும். பாருங்கள்! ராஜராஜன் காலத்திய சட்டம் மிகக் கறாராக இருந்ததைக் காண்பிக்கிறது. கோயில் என்பது தனி, ஊர் ஆளுகை என்பது தனி என்பதையும், வேலியே பயிரை மேய்ந்தாலும், அது தவறுதலாகவும், சிறிய அளவே ஆயினும் நீதியின் கண் முன்பு நக்கீரர் சொல்வது போல குற்றம் குற்றமே. ஊரார் என்றாலே அரசு அலுவலகர்கள்தானே., அவர்களுக்கே இப்படி ஒரு இழிவான முறையில் தண்டனை என்பதையும் அதுவும் கல்லில் பொறிக்கப்பட்டு எதிர்காலத்தில் எல்லோரும் பார்க்கவேண்டும் என்று எழுதப்பட்ட தண்டனை
என்பதையும் பார்க்கவேண்டும்.. இன்றைய ஆட்சியாளரும், கோவில் அலுவலர்களும் இதைக் கவனிக்க வேண்டும்.
ராஜராஜன் காலத்திலேயே அரசு இப்போது இருப்பது போல ‘கோவில் மேலாளர்’ களை பல கோவில்களுக்கு நியமித்தது. இவர்கள் வேலையே கோவில்களைக் கண்காணித்து குறைகளை மட்டுமே கண்டுபிடித்து அரசுக்குத் தகவல் அனுப்பவேண்டும். மற்ற்படி கோவில் நிவாகங்களை ’மகேசுவர சபை’ என்றொரு நிர்வாக அமைப்பு கவனித்துக் கொள்ளும். இந்த அரசு கோவில் மேலாளர்கள் மட்டும் தயவு
தாட்சண்யமின்றி செயல்பட்டதும் சில கல்வெட்டுகள் மூலம் தெரியவருகிறது. கோயில் நிலங்களில் ‘கை’ வைத்த சிலரைப் பிடித்து அவர்களின் மொத்த நிலங்களையும் பறிமுதல் செய்ததும் கல்வெட்டுகளில்குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றில் ஒன்று, கோயில் சம்பத்துகளைக் காக்கவேண்டிய திருவறை சதுர்வேதிமங்கலத்து பெருங்குறி பெருமக்கள் சபை பொன் பாத்திரங்களையும், கோயில் நகைகளையும் தவறாக பயன்படுத்தினர் (only ‘mis-use’ not stealing) என்பதை அறிந்த ராஜ ராஜ சோழனது அலுவலர் சம்பந்தப்பட்ட அத்தனை பேருடைய நிலங்களையும் பறிமுதல் செய்தார் என்பதையும் ஒரு கல்வெட்டு தெரிவிக்கின்றது (ARE 359/1917).
கோயில் என வரும்போது, குற்றம் செய்பவர் பூசை செய்யும் பிராம்மணர் (இவர்களை சிவப்பிராம்மணர் என அழைப்பர்) ஆயினும் தண்டனைகளினின்று தப்பிக்க முடியாது. இப்படித்தான் ஒரு கல்வெட்டில் (ARE 279/1927) இரண்டு சிவப்பிராம்மணர்கள் அம்மன் நகைகளை எடுத்து தன் கள்ளக் காதலிகளின் கழுத்தில் அலங்கரித்து அழகு பார்த்ததைக் கண்டுபிடித்த ‘மகேசுவர சபை’ முதலில் கண்டித்துத் திருத்தப்பார்த்து அரசனிடம் புகார் செய்தது. மூன்றாம் ராஜராஜனின் 28 ஆவது வருடத்தில் அவனுக்குக் கிடைத்த இந்தப்
புகார் மீது விசாரணை செய்து அழைத்து வருமாறு இரண்டு அலுவலர்களை அனுப்பி வைத்ததாகவும், ஆனால் இந்த சிவப்பிராமணர்கள் அந்த அரசு அதிகாரிகளையும் அடிக்க முன்வந்ததும், இதனால் கோபமுற்ற மகேசுவர சபையும் ஊர் சபையும் அந்த இருவரையும் கடுமையான தண்டனைக்கு உட்படுத்தியதாக இந்தக் கல்வெட்டு கூறுகிறது. என்ன தண்டனை என்று மட்டும் சொல்லவில்லை.
இந்த அரசன் காலத்திலேயே திருநாகேஸ்வரத்தில் ஒருவர் சுவாமியுடைய ஆடைகளைத் தம் வசம் எடுத்துக் கொண்டார். அத்தோடு இல்லாமல் கோயிலுக்கு என விடப்பட்டிருந்த செங்கற்களை தம் வீடு கட்டப் பயன் படுத்தி இருக்கிறார். விஷயம் வெளியே தெரிய வந்தது. அவ்வளவுதான், மனுஷன் இதுவரை சம்பாதித்த சொத்தெல்லாம் அம்பேல். அவை ஏலத்தில் விடப்பட்டு அதன் மூலம் கிடைத்த 4000 காசுகளை கோயில் பொக்கிஷத்துக்கு அனுப்பி வைத்த பிள்ளை யாதவராயர் எனும் அரசு அலுவலர் அப்படியே சும்மா போகாமல் மறக்காமல் கல்வெட்டிலும் போட்டு விட்டு ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் நாம் அறிந்து கொள்ளச் செய்துவிட்டார். ஒருவேளை இதைத்தான் ’சிவன் சொத்து அபகரிப்பு, குல நாசம்’
என்று சூசகமாகச் சொன்னார்களோ..
இரண்டாம் ராஜராஜன் (1053-62) காலத்திலேயே மகேசுவர சபைக்கு பூரண அதிகாரங்கள் அரசனால் வழங்கப்பட்டிருந்தது. பந்தநல்லூர் பசுபதீஸ்வரம் ஆலயத்தில் கிடைத்த கல்வெட்டில் (ARE 115/1932) இந்த மகேசுவர சபையோடு, தேவகண்மீர், பதிபாடுடையோர் (தேவாரம் பாடுவோரை பதிகம் பாடுவோர் எனக்
குறிப்பிடுவது இதன் மூலம் தெரிய வரும்), ஸ்ரீகாரணம் செய்வோர் சபை போன்றோர் கலந்த பெரிய சபை, கோயில் சம்பந்தப்பட்ட இந்தக் குற்றங்களை ஆராய்ந்து குறிப்பாக சிவப்பிராம்மணர்கள் தவறு செய்யும் பட்சத்தில், அவர்களுக்கும் சேர்த்து தண்டனை வழங்கும் அதிகாரம் கொடுக்கப்பட்டிருந்தது.
சிவத்துரோகம் என்பது சிவன் கோயில் என்றல்லாமல் எல்லா தெய்வங்களின் கோயில்களில் நடக்கும் குற்றங்களுக்கும் பொதுவாகக் கொடுத்த பெயர்தான். ஏகப்பட்ட கல்வெட்டுகள் சின்னச் சின்ன கோயில் குற்ற விஷயங்கள் பற்றி கூடப் பேசுகின்றன. தமிழ்நாட்டில் தெய்வங்களின் ஆலயங்கள் இன்னமும்
சீர்மையாகவும், புனிதம் தவறாமலும் இருப்பது நம் எத்தனையோ பேருக்கு ஆச்சரியத்தைத் தரலாம். ஆனால் சோழர்கள் மிக மிக அதிகமான முறையில் கோயில்களையும் அதன் புனிதத் துவத்தையும் காத்து வந்தனர். அந்த அரசர்கள் எளிமை, அதிலும் ஆலயத்துக்குச் செல்லும்போது அரையாடையுடன் செல்வது போன்ற சிற்பங்கள் - ராஜராஜசோழனும், அவன் மனைவியும் இப்படித்தான் சென்றதாக ஒரு சிற்பம், அதற்குப் பிறகு சேக்கிழார் பெருமானுடன் இரண்டாம் குலோத்துங்கன் அரையாடையுடன் தில்லை கோயிலில் சிற்பமாக செதுக்கி வைத்திருப்பதிலும் தெரியும். இப்போதும் எத்தனைதான் அத்து மீறல்கள் ஆட்சியாளர் மற்றும் கோவில் அலுவலர்கள் மூலம் வந்தாலும் சோழர்களின் புனிதத்துவமான தர்மச்
செயல்கள் இந்த நாட்களிலும் நம்மைக் காத்து வருகிறது என்றே சொல்லலாம். இனிவரும் நாட்களிலும் நம்மைக் காக்கும்.
இந்த ராஜத்துரோகம், சிவத்துரோகத்துக்கு அடுத்துதான் கொலை, கொள்ளை, திருட்டு, வெட்டு, வரி ஏய்ப்பு இன்ன பிற குற்றங்கள் எல்லாம், அவையும் பார்ப்போமே..

Admin
Admin

Posts : 15
Join date : 24/07/2011
Age : 70
Location : P.U.C.

https://ennar.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum