ENNAR
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

தலித்தியமும் இலக்கியமும்

Go down

தலித்தியமும் இலக்கியமும்      Empty தலித்தியமும் இலக்கியமும்

Post  Admin Sat Aug 29, 2020 5:37 pm

தாழ்த்தப்பட்டவர்கள் (தலித்துகள்) பற்றிய குறிப்புகள் பழைய இலக்கியங்களில் காணப்படுகின்றன. சங்க இலக்கியத்திலும் பக்தி இலக்கியத்திலும் பிற்கால இலக்கியங்களிலும் தலித்துகளின் வாழ்வும் பணியும் பேசப்படுகின்றன. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் சமய மாற்றத்தினை எதிர்கொள்ளும் வகையில் தாழ்த்தப்பட்டவர்களை மையப்படுத்திய ‘பள்ளு இலக்கியம்’ போன்றவையும் உருவாயின. இன்றைய இலக்கியத்திலும் அது பேசப்படுகிறது. தனி இலக்கிய வகையாகவும் அது உருப்பெற்றுத் தலித் இலக்கியம் எனப் பெயர் பெற்றிருக்கிறது.

5.2.1 பழைய இலக்கியங்களில் தலித்துகள்

தொல்காப்பியம் உள்ளிட்ட சங்கநூல்கள் உழைக்கும் மக்களைத் தாழ்த்தப்பட்டவர்களாகச் சித்திரிக்கின்றன. இழிசினன் (புறநானூறு, 82,287,289), இழிபிறப்பாளன், புலையன் (புறம்,360), புலைத்தி (புறம், 259,311) முதலிய சொற்கள் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன. துடியெனும் இசைக்கருவியை இசைக்கிறவனைப் புறநானூறு (170) சித்திரிக்கின்றது.

‘இழி பிறப்பாளன் கருங்கை சிவப்ப

வலி துரந்து சிலைக்கும் வன்கட் கடுந்துடி.’

இந்தப் பாடலுக்கு அப்படியே பொருள் தருவது திறனாய்வாகாது. அவனுடைய கைகளைக் ‘கருங்கை’ என்று அடைகொடுத்துச் சொல்லுவதையும், கைகள் ‘சிவப்ப’ என்று சிறப்பித்துச் சொல்லப்படுவதன் காரணத்தையும், ‘துடி’ என்ற இசைக்கருவிக்குக் கொடுக்கின்ற அடைமொழிக்குரிய அவசியத்தையும் சொல்லவேண்டும். அப்போதுதான் அது தலித்திய வாழ்க்கையைக் காட்டும் திறனாய்வாக ஆகமுடியும்.

பெரியபுராணத்தில் திருநீல கண்ட யாழ்ப்பாணர், திண்ணன், திருநாளைப் போவார் எனும் நந்தன் ஆகிய மாந்தர்கள் நாயன்மார்களாக வருகிறார்கள். இவர்களின் சித்திரங்கள் வரலாற்றுப் பின்புலங்களோடும் காரண காரியங்களோடும் ஆராயப்படுகின்ற போது, தலித்தியத் திறனாய்வின் பயன் சிறப்படையும். இப்படிப் பழைய இலக்கியங்கள் சிலவற்றில் ‘இழிசினர்’ அல்லது ஒடுக்கப்பட்டோர் வருகின்றனர். ஆனால் மிகவும் குறைவாகவே இடம் பெறுகின்றனர். பல இலக்கிய வகைமைகளில் இவர்கள் இடம் பெறுவதே இல்லை. ஏன் என்று தலித்தியத் திறனாய்வு கேள்வி கேட்டுப் பதில் சொல்ல வேண்டும். பிற்காலத்திய பள்ளு இலக்கியங்களில்தான், முதன் முறையாகத் தலித்துகள் (பள்ளர்) தலைமை இடம் பெறுகின்றனர். ஆனால் இவர்களை அல்லது இவர்களின் உழைப்புகளைப் போற்றுவதற்காக இல்லை; அவர்கள் பெரிய பண்ணையார்களுக்கு விசுவாசமாக நடந்துகொள்ளவேண்டும் என்ற உட்குறிப்பு இவற்றிலே உண்டு. பள்ளு இலக்கியம் பற்றித் திறனாய்வாளர் கோ. கேசவன் கூறும் கருத்து தலித்தியத் திறனாய்வுக்கு முன்னோடியாக அமைகிறது.

5.2.2 இன்றைய இலக்கியங்களில் தலித்துகள்

தலித்து என்ற சொல்லை மையமாகக் கொண்டு, தலித்து பற்றிய கொள்கை உருவானது, தமிழில் 1990-களுக்குப் பிறகுதான். ஆனால் அதற்குப் பிறகுதான் தலித் இலக்கியம் தோன்றியது என்று சொல்வது பொருந்தாது. அந்தச் சொல் புதிதாக இருந்தாலும், அதே பொருண்மை நீண்டகாலமாக இருந்து வருவதுதான். அதுபோல், தலித் உணர்வு என்பதும் வெவ்வேறு வகைகளில் ஏற்கனவே இருந்து வருவதுதான்.

இன்றைய இலக்கியம் என்பதைப் பொறுத்த அளவில், டி. செல்வராஜ் எழுதிய ‘மலரும் சருகும்’ (1970) என்ற நாவல்தான் முதல் தலித் நாவல் என்று சொல்லப்படவேண்டும். நெல்லை வட்டாரத்தைப் பின்புலமாகக் கொண்ட இந்த நாவல், தலித்துக்களை ஒரே தளத்தில்- ஒரே பரிமாணத்தில்- அல்லாமல், பல தளங்களில் பல பரிமாணங்களில் காட்டுகின்றது. கூலி விவசாயிகளாகவும் சிறு நிலவுடைமைக்கிழார்களாகவும் இருக்கின்ற தாழ்த்தப்பட்ட பாமர மக்கள் எப்படித் தங்களைக் காப்பாற்றிக் கொள்ளவும், தங்கள் நிலங்களையும் தொழில்களையும் காப்பாற்றிக் கொள்ளவும் துன்பப்படுகிறார்கள் என்பதை இந்த நாவல், எதார்த்தமான உத்தியில் சித்திரிக்கின்றது. இவர்கள் மத்தியில் தோன்றிய ஒரு இளைஞன் சப்இன்ஸ்பெக்டராக ஆகிறான். ஆனால் அந்த அதிகாரமும் புதிய உறவுகளும் அவனைத் தன்னுடைய சக மனிதர்களுக்கு எதிராக நிறுத்துகின்றன. இன்னொருவன், ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்று வருகிறவன்; தன்னுடைய மக்களின் பிரச்சினைகளை எடுத்துக்கொண்டு அவர்களுக்காக உழைக்கிறான். இந்நாவலில் வருகிற ஒவ்வொரு பாத்திரமும், தலித்துகளின் மாறிவரும் வாழ் நிலைகளையும் உணர்வுகளையும் நடப்பியல் நிலையில் சிறப்பாக வெளிப்படுத்துவதைக் காணமுடிகிறது.

அடுத்து, ஈழத்தின் சூழலில் கே. டானியல் எழுதிய ‘பஞ்சமர்’ என்ற நாவலும் தலித்துக்களின் வாழ்க்கையை எதார்த்தமாகவும் போராட்டப் பண்போடும் சித்திரிக்கின்றது. டி. செல்வராஜ், டேனியல், பூமணி - என்ற மூவரும் தலித்து இலக்கியத்தின் முன்னோடிகள், ஆனால் இவர்கள், சமூக மாற்றம் வேண்டுகிற புரட்சிகர மனப்பான்மை கொண்டவர்களாதலால் தங்கள் எழுத்துக்களை ‘தலித்’ எழுத்துக்கள் என்று அடையாளப்படுத்த விரும்புவதில்லை. மேலும் தலித்துகளின் சாதியடையாளத்தை முதன்மைப் படுத்தாமல் அவர்களை ஒரே நேரத்தில் தலித்துகளாகவும், உழைப்பாளிகளாகவும் பார்க்கின்ற பார்வை, இவ்வகை எழுத்தின் முக்கியமான பண்புகளில் ஒன்று. ஸ்ரீதர கணேசன் என்பவரின் உப்பு வயல் என்ற நாவலில் இந்தப் போக்கு முதன்மையாக உள்ளது. ஒரு தலித் பெண்ணின் வாழ்க்கை அனுபவங்களைச் சித்திரிக்கின்றது இந்த நாவல். அவள் ஒரு பெண்; ஒரு தலித்; உப்பளத் தொழிலாளி என்ற மூன்றும் ஒன்றாக இயங்குகிற ஒரு வடிவமாக அவள் விளங்குகிறாள். உண்மையுணர்வோடும் போராட்ட உணர்வோடும் கூடிய இந்த நாவல், தலித் நாவல் என்ற வகையில் புதியதொரு கோணத்தைச் சேர்ந்ததாகும். ராஜ் கவுதமன், பாமா , இமையம், சோ. தருமன், விழி.பா. இதய வேந்தன், அழகிய பெரியவன் ஆகியோரும், மாற்கு, சி. இராசநாயகம், பெருமாள் முருகன், சோலை சுந்தரப் பெருமாள், பஞ்சு முதலியோரும் தலித் வாழ்க்கைகளை மையமாகக் கொண்டு நல்ல பல புனைகதைகள் எழுதியுள்ளனர்.

சிறுகதைகள், புதினங்களன்றியும் தலித் சிந்தனையாளர்கள் பலர் கவிதைகளிலும் ஈடுபட்டுள்ளனர். இவர்களிடமிருந்து மிகச்சிறந்த கவிதைகள் வந்துள்ளன. மதிவண்ணன், என். டி. ராஜ்குமார், உஞ்சைராஜன், பாமரன், இராச. முருகுபாண்டியன், பிரதிபா ஜெயச்சந்திரன், பாரதி வசந்தன் முதலிய பெயர்கள் இத்தகைய கவிஞர்களின் அணிக்கு அழகு சேர்க்கின்றன.

Admin
Admin

Posts : 15
Join date : 24/07/2011
Age : 70
Location : P.U.C.

https://ennar.forumta.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum