ENNAR
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

இழிபிறப்பாளன் கருங்கை சிவப்ப”: சங்ககால ஜாதிகள்

Go down

இழிபிறப்பாளன் கருங்கை சிவப்ப”: சங்ககால ஜாதிகள் Empty இழிபிறப்பாளன் கருங்கை சிவப்ப”: சங்ககால ஜாதிகள்

Post  Admin Tue Apr 09, 2019 3:35 pm



ஆய்வுக் காட்டுரை எழுதியவர்:- லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:- 1149; தேதி 5 ஜூலை 2014.

“கேட்டியோ வாழி பாண பாசரைப்
பூக்கோள் இன்றென்றறையும்
மடிவாய்த் தண்ணூமை இழிசினன் குரலே – புறம்.289

இழிபிறப்பாளன் கருங்கை சிவப்ப
வலிதுறந்து இலைக்கும் வன்கண் கடுந்துடி – புறம் 170

துடி எறியும் புலைய
எறிகோள் கொள்ளும் இழிசின – புறம் 287

புல்லகத் திட்ட சில்லவிழ் வல்சி
புலையனேவப் புல்மேல் அமர்ந்துண்டு – புறம் 360

சங்க இலக்கியத்தில் உள்ள 18 மேல் கணக்கு நூல்களில் ‘புறநானூறு’ – என்னும் நூல் தமிழ் பண்பாட்டைப் பிரதிபலிக்கும் கண்ணாடி. ஆகையால் அப்புத்தகத்தில் இருந்து மட்டும் சில மேற்கோள்களைத் தந்தேன்.

இவற்றின் ஒட்டுமொத்த பொருள்: புலையன் ஜாதி, பிறப்பால் அமைந்தது. புலையர்கள் சுடுகாட்டு வேலைகளைச் செய்வர். அவர்கள் பறை கொட்டுவது —(பறையர் என்பது இந்த வாத்தியத்தில் இருந்து பிறந்த சொல்) — முதலிய தொழில்களைச் செய்வர். அவர்கள் கீழ்ஜாதி மக்கள். “கட்டில் நிணக்கும் இழிசினன் (புறம் 82) என்றும் பேசப்படுகிறான் (கட்டில் செய்ய தோல் வாரில் வேகமாக ஊசியைச் செலுத்தும் புலைமகன் என்பது பழைய உரை)

‘’துடியன், பாணன், பறையன், கடம்பன் என்று
இந்நான்கல்லது குடியும் இல்லை’’— புறம்.335 (மாங்குடிக் கிழார்)

– என்று நான்கு குடிகளை ஒருச்சேரப்படுவதில் இருந்து இந்த நாலு குடிகளும் கீழ்மட்டத்தில் இருந்த குடிகள் என்பதும் தெரிகிறது.

சங்க கால ஜாதிப் பிரிவுகள் பற்றி ஏராளமான பாடல்களில் குறிப்புகள் வருகின்றன. ஆனால் அவை அன்றாட நடைமுறைகளைப் பாதித்ததாகவோ மோதல்களை உண்டாக்கியதவோ சான்று எதுவும் இல்லை. பாடல்களை இயற்றியோரிலும் பல வகுப்பினர் இருந்தனர். ஆனால் ஜாதிச் சண்டை இல்லை. சங்க காலத்துக்கு 400 ஆண்டுகளுக்குப் பின்னர் வந்த தேவார, திவ்யப் பிரபந்த காலத்தில் சிவ, விஷ்ணு பக்தர்கள் இடையே எவ்வளவு சமரசம் நிலவியது என்பதை பெரிய புராணத்தில் இருந்தும் ஆழ்வார் சரிதங்களில் இருந்தும் அறிகிறோம்.

ஆவுரித்துத் தின்னும் புலையரேனும் — என்று அப்பர் பாடுகிறார். மாடு தின்னும் புலையா, உனக்கு மார்கழித் திரு நாளோ—என்று நந்தனார் நாடகத்தில் கேட்கிறோம். இது சங்க காலத்தில் இருந்து தோன்றிய ஜாதிப் பகுப்பு.

நாநிலப் பிரிவுகளில் என்ன என்ன சிறிய ஜாதிகள் இருந்தன என்பதும் தெரிகிறது. சில சொற்கள் சங்க இலக்கியத்திலேயே பயிலப்படாததால் அவைகளின் பொருள் கூட இன்று தெரியவில்லை.

வெளிநாட்டு இந்து அல்லாத “அறிஞர்கள்” (?!?!) எழுதிய புத்தகங்களில் இந்தப் பட்டியலை வெளியிடாமல் மறைத்திருப்பதைக் காணலாம். தமிழர்கள் இடையே “நல்ல பிள்ளை” பட்டம் வாங்கி உலகத் தமிழ் நாட்டில் பொன்னாடை போர்த்திக் கொள்ள இப்படி ஒரு வேஷம்!!! பழங்காலத்தில் மதத்தைப் பரப்பவும், பிரிட்டிஷ் ஆட்சியை நிலை நாட்டவும், கேளிர் பிரித்து பகச் சொல்லி பகைமை வளர்கவும் இருந்த ஒரு கூட்டமும் இப்படி மறைத்தது. முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க யாரே வல்லார்? பழந்தமிழ் நூல்கள், உரைகள் எல்லாவற்றிலும் உண்மை மறைக்கப்படவில்லை.

அந்தக் காலத்தில் ராஜா மகன் ராஜாதான், குயவன் மகன் குயவன் தான். ராமாயண, மஹாபாரத காலம் போலவே சில விதி விலக்குகளும் உண்டு. இது உலகம் முழுதும் இன்றும் இருக்கிறது. அரசியல்வாதிகள் மகன்கள், அரசியலில் பெரிய பதவிகளைப் பிடிப்பது போல, செல்வாக்கு உடையவர்கள் மகன்கள் டெலிவிசன் போன்ற மக்கள் தொடர்பு சாதனங்களில் பெரிய நிலைக்கு உயர்வது போல இது — இங்கு லண்டனிலும் கூட இதைக் காண்கிறோம்.

இதோ நாநிலப் பகுப்பில் (பாலை நிலத்தையும் சேர்த்து 5 நிலங்கள்) குறிப்பிடப்படும் உயர்ந்த, தாழ்ந்த ஜாதிகள்:

குறிஞ்சி
உயர்ந்தோர்: பொருப்பன், வெற்பன், சிலம்பன், கொடிச்சி
தாழ்ந்தோர்: குறவர், குறத்தியர், கானவர்

முல்லை
உயர்ந்தோர்: நாடன், தோன்றல், மனைவி, கிழத்தி
தாழ்ந்தோர்: இடையர், இடைச்சியர், ஆயர், ஆய்ச்சியர்

மருதம்
உயர்ந்தோர்: ஊரன், மகிழ்நன், கிழத்தி, மனைவி
தாழ்ந்தோர்: உழவர், உழத்தியர், கடையர், கடைசியர்

நெய்தல்
உயர்ந்தோர்: சேர்ப்பன், துறைவன், புலம்பன், பரத்தி, நுளைச்சி
தாழ்ந்தோர்: நுளையர், நுளைச்சியர், பரதர், பரத்தியர், அளவர், அளத்தியர்

பாலை
உயர்ந்தோர்: விடலை, இகுளை, மீளி, எயிற்றி
தாழ்ந்தோர்: மறவர், எயினர், எயிற்றியர், மறத்தியர்
(உதவிய நூல்: ஐங்குறு நூறு, எம்.நாராயண வேலுப்பிள்ளை).

அந்தணர்கள் (பிராமணர்கள்) பற்றிய குறிப்புகள்தான் அதிகம். இதற்குக் காரணம் அந்தணர் பாடிய பாடல்கள்தான் சங்க இலக்கியத்தில் அதிகம். கபிலர், பரணர், நக்கீரர், மாமூலனார் ஆகிய பிராமண புலவர்கள் கொடிகட்டிப் பரந்தனர்.


Caste System in Ancient Egypt.

காஞ்சி சுவாமிகள் உரை
ஜாதி, வர்ணாஸ்ரமம், பிராமணர், வேதம் என்பதெல்லாம் “ வட நாட்டு இறக்குமதிச் சரக்கு”, “ஆரிய மாயை” — என்று சொல்லி தமிழ் மக்களை ஏமாற்றுவோருக்கு காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் அழகாகப் பதில் கொடுத்துள்ளார். வேள்வி, மறை (யாகம், வேதம்) என்பதெலால்ம் பழந்தமிழ் சொற்கள் மட்டுமல்ல, அவை எல்லாம் தமிழ் வேர்ச் சொற்களில் இருந்து பிறந்தவை, மொழி பெயர்ப்பு அல்ல என்பதை காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் (1894-1994) சுட்டிக்காட்டினார்.

தமிழ் தாத்தா உ.வே.சுவாமிநாதைய்யர், ஆரிய-திராவிட இனவெறி மாயையில் சிக்காமல் உள்ளதை உள்ளபடி எழுதி வைத்துவிட்டுச் சென்றார். பாரதி “ஆரிய” என்ற சொல்லை ஏராளமான பாடல்களில் பாடிப் புகழ்ந்து, போற்றி, பாராட்டி ஆரிய- திராவிட இனவெறிக் கொள்கையை நிராகரித்தார். (ஆரிய= பண்பாடு உடையோன்; இனவெறிப் பொருளைக் கொடுத்தவர்கள் கால்டுவெல் முதலிய வெளி நாட்டுச் சழக்கர்கள்).

ரிக் வேதத்தில் உள்ள புருஷசூக்தத்தில் இறைவனுடைய நாலு அங்கங்கள் நாலு ஜாதிகள் என்று கூறப்பட்டுள்ளன. கௌடில்யர் அர்த்த சாஸ்திரத்திலும் (3-70) நான்கு ஜாதிகளை ஆரியர்களின் 4 பிரிவுகள் என்றே எழுதியுள்ளார். ஆனால் வெளிநாட்டு, ‘இந்து’வல்லாத “ அறிஞர்கள்” (?!?!?) சூத்திரர்கள் என்பவர்கள் ஆரியர் அல்லாதோர் என்று புரளி கிளப்பி யுள்ளனர்.

வேத காலம் போலவே அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்ற நால் வருணப் பகுப்பு இருந்தது — குடி என்ற சொல் ஜாதி என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டது.

முதல் முதலாக ‘சாதி’, ‘வருணம்’ என்ற சொற்கள் சிலப்பதிகாரத்தில்தான் பயன்படுத்தப்பட்டன. சிலப்பதிகாரக் கதை இரண்டாம் நூற்றாண்டில் நடந்தபோதும், காவியம் உருவானது ஐந்தாம் நூற்றாண்டு என்பதை மொழி நடையே காட்டிவிடுகிறது. நால்வேறு மக்கள் அவரவர்களுக்கான தெருக்களில் வசித்ததை மதுரைக் காஞ்சி (522) காட்டுகிறது.

சிலப். 6-164, 14-183, 8-41, 14-212, 22-10; 8-41

மிலேச்சன் போன்ற தீண்டத்தகாத யவனர்களையும் மஹாபாரதம் முதல் முல்லைப் பாட்டுவரை காண்கிறோம் — (முல்லை 65-66).


Caste System in Ancient Mayan Civilization, South America.

மனுநீதியும் புறநானூறும்

மனுஸ்மிருதியில் மனு என்ன சொன்னாரோ அதை அப்படியே புறநானூற்றுப் (1,2,3 ஆம் நூற்றாண்டு) புலவரும் திருவள்ளுவரும் (ஐந்தாம் நூற்றாண்டு) சொல்லி இருக்கிறார்கள்:

புறம் 183 (ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன்)

வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும்
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே

கீழ்ஜாதியில் ஒருவன் கற்றுத் தேர்ந்தான் ஆனால் அவனை மேல்ஜாதிக்காரர்களும் வாழ்த்தி வணங்குவர்.

வள்ளுவனும் இதையே சொன்னான்:

மேற்பிறந்தாராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
கற்றார் அனைத்திலர் பாடு (குறள் 409)

பொருள்:- உயர் குடியில் (ஜாதியில்) ஒருவர் பிறந்து படிக்காவிட்டால், கீழ்க்குடியில் பிறந்து படித்துப் பட்டம் பெற்றவரை விட ஒருபடி தாழ்வே.

மனுவும் இதையே கூறியிருக்கிறார்:–

மேலான அறிவை நாலாம் வருணத்தினிடம் இருந்தும் கொள்ளலாம் ( மனு 2-238)
அறம், ஒழுக்கம், நன்மொழி, பற்பல கலைகள் முதலியவற்றை எவ்விடத்தில் இருந்தும் அறியலாம் ( மனு 2-240)

வேற்று இனத்தாரிடமும் வேதம் கற்கலாம். அப்படிக் கற்கும் காலையில் அவரை குருவாக மதித்து கைகட்டி வாய் புதைத்து அவர் பின்னே செல்ல வேண்டும் என்றும் மனு பகர்வார் (2-242).

மஹாபாரதத்தில் இதற்குக் கசாப்புக்கடை தர்ம வியாதன் முதல் வியாசர் வரை பல கதைகள் கிடைக்கும். வேடனாக இருந்து ரிஷியாக மாறிய வால்மீகி இன்னும் ஒரு எடுத்துக் காட்டு. வேத கலத்தில் கவச ஐலுசர் போன்ற அறிஞர்களும் இவ்வகையினரே.

ஜாதிகள் ஒழிக!

ஜாதிப் பிரிவினைகளை ஆதரிக்கும் கட்டுரை அல்ல இது. ஆனால் சங்க காலத்தில் ஜாதிகள் உண்டு, பழந் தமிழினத்திலும் பிரிவினைகள் உண்டு. அவை தொழில் முறையில் மட்டும் அமைந்தது அல்ல, பிறப்பினாலும் அமைந்தவை என்பதற்கு நிறைய ஆதாரங்கள் உண்டு.

ஆனால் உடை, உணவு, உறைவிடம் ஆகிய மூன்று அடிப்படைத் தேவைகள் எல்லோருக்கும் கிடைத்தன. புலவர்கள, பாணர்கள் முதலியோர் வறுமையில் வாடினாலும் அதற்கு அவர்களின் ஜாதி காரணம் அல்ல. மொத்தத்தில் மக்கள் அவரவர் உறைவிடங்களில், வரையறுக் கப்பட்ட பகுதிகளில் இன்ப வாழ்வு வாழ்ந்தனர்.

தேர்தலில் ஜாதி, கல்வி நிறுவன அனுமதியில் ஜாதி, வேலை ஒதுக்கீட்டில் ஜாதி – இப்படி எல்லாவற்றிலும் ஜாதியை வேண்டும் தமிழர்கள் — அம்பேத்கர் என்னும் பெருமகன் சொன்ன 25 ஆண்டு எல்லைக்குப் பின்னரும் ஜாதிச் சலுகைகளை விரும்பும் தமிழர்கள் — ஜாதிச் சமரசம் பற்றிப் பேச அருகதை அற்றவர்களே!! அப்படிப் பேசினால் அவர்களது மனச் சாட்சியே அவர்களைப் பார்த்து நகைக்கும்!!!!

அகநானூற்றில் வரும் ஜாதிகள்/தொழில் முறைப் பிரிவுகள்:–
அகநானூற்றில் உள்ள சாதிகள்: அண்டர்/ இடையர், அத்தக் கள்வர், அந்தணர், உமணர், உழவர், குயவர், கொல்லர், தட்டார், பரதவர், பழையர், பானர், யானைப்பாகர், வேளாப் பார்ப்பார்,

குறவர் குடி–அகம் 13, உழவர் குடி— அகம் 30, பரவர் குடி –அகம் 10, நுளையர்- அகம் 366, எயினர்— அகம்.79, மறவர்- அகம்.35, வேட்டுவர்— அகம்.65.

–சுபம்

நன்றி https://tamilandvedas.com/2014/07/05/%E0%AE%87%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9A/

Admin
Admin

Posts : 15
Join date : 24/07/2011
Age : 70
Location : P.U.C.

https://ennar.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum